அது என்னோடு வாழ்கிறது !
எனது ஒற்றை படுக்கையறையில் -
என்னோடு சேர்ந்து அதுவும் வாழ்கிறது ..!
இரவு மட்டும் வருகிறது,
எப்படித்தான் தெரிகிறதோ புரியவில்லை ...
சரியாக இரவு உணவருந்தும் நேரம் -
ஆஜராகிவிடுகிறது !
முதல் நாள் விரட்டினேன்,
இரண்டாம் நாளும் ...
மூன்றாவது நாள் -
கொஞ்சம் உணவு வைத்தேன்.
நான்காவது நாள் ,
எனது கைகால்கள்மேல் சவாரி செய்ய ஆரம்பித்தது ..
அடுத்த நாள் தலைமேல் நாட்டியம் ..!
கொஞ்சம் இடம்கொடுத்தால், திமிரைப்பாருங்கள்...
வார இறுதியில் - –எனது புதிய நண்பனைக்காணவில்லை !
திங்கள் வந்தது,
தலைவரும் வந்தார் ...
வாருங்கள் எலியாரே
விடுமுறைக்கு உறவினர் வீடு சென்று விட்டீரோ !
இப்பொழுதெல்லாம் அது அவன் ஆகிவிட்டது ...
எல்லாம் நெருங்கிய நண்பனாகிவிட்ட காரணம்தான் !
எலியார் வருவார்,
நேராக சமையலறையை பார்வையிடுவார்,
தட்டில் வைத்திருக்கும் உணவு கபளீரம் ஆகும்,
அடுத்தது கொஞ்சம் விளையாட்டு,
பிறகு என்னோடு கொஞ்சும் பேச்சு (கீச் கீச் சத்தம்தான்)
இப்பொழுதெல்லாம் எனது அறையில்,
இரவு முழுதும் –
பேச்சு சத்தம் கேட்பதாய் -
பக்கத்து அறைவாசிகள் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் !
சில நாட்கள்,
நடுச்சாமத்தில் வரும்,
இங்கும் அங்கும் ஓடும்,
ஜன்னல்களில் தலைகீழாய் நடைபயிலும்,
பாடகர் என்ற நினைப்பில் கீச் கீச் பாட்டுவேறு,
தீக்குச்சி எடுத்து கொஞ்சம் வாள்சன்டை,
அதீத குளிரினால் என் போர்வைக்குள் பதுக்கம் ...
ஒருவழியாக தூங்கப்போகும் தருணத்தில் ,
விரல் நகம் கடித்து, தூங்காதடா என்று மிரட்டல் வேறு ...
ம்ம்ம்..அதோடு அன்றைய தூக்கம் முடிந்தது
அடுத்த நாள் அலுவலகத்தில் கெட்டதூக்கம்தான் ..!
சில நாளில் கடுப்பாகி -
கொஞ்சம் தனிமையில் விடுகிறாயா எனக்கேட்டால் ,
எனது உள்ளங்கையில் உட்கார்ந்து -
“உனதன்பில் கட்டிப்போட்டுவிட்டாய் எனச்சொல்லும்”
ம்ம்ம்… நன்றாக பேசக்கற்றுகொண்டாய் -
என் குட்டைவால் நண்பனே !
அவன் என்னோடு வாழ்கிறான் !
எனது ஒற்றை படுக்கையறையில் -
என்னோடு சேர்ந்து அவனும் வாழ்கிறான் ..!