Tuesday, October 14, 2008

இப்படித்தான் இரவு பிறந்ததோ ..!

ஊரனைத்தும் உன் பின்னால் ,
பித்துப்பிடித்து அலைகிறது ...
அது எப்படி ஒன்றும் தெரியாதவள்போல் -
சாந்தமுகமாய் செல்கிறாய் ?


நகரும் பூவின் ,
நருமணம் உணரமுடியாமல் தவிக்கிறது -
வண்ணத்துப்பூச்சி ,
கொஞ்ச நேரம் ஓரிடத்தில் நின்றுகொண்டிரு ..!


உன் ஒற்றைச்சோம்பலில் ,
என் இதயம் -
ஓராயிரம் சில்லுக்களாய் ..!


"எப்படா வருவ", என்ற -
உன் வினாவிற்கு ,
அடுத்த மாதமென்று சொல்லி ;
உன் - ஆசையில் மண் தூற்றுவதைவிட ;
நாளையே வந்துவிடுவேனென்று, ஏமாற்றுவது மேல் ..!


குலதெய்வ கோவிலுக்கு போகலாமென்றார்கள் ...
உன்னை ஒருமுறை சுற்றிவந்து ,
நேர்த்திக்கடன் முடிந்ததென்று சொன்னேன் ..!


உன்னில் நனைவதர்க்காகவே ,
மழை வருகிறது ...
குடை விட்டெறிந்து ,
குதூகலம் அணிந்துகொள் .
மோட்சமடையட்டும் மழை ..!


" ஒரு ஊரில் இரண்டு தேவதைகள் ", என்று -
பாட்டி கதைசொல்ல ஆரம்பிக்கையில் ,
பொய் சொல்லாதே ஒரு தேவதைதானென்று ,
ஓரக்கண்ணால் உனைப்பார்த்து சிரித்தேன் ..!



உள்ளூர் மாப்பிள்ளை வேண்டாமென -
உன் தகப்பன் சொல்லக்கேட்டு ,
அடுத்த நாளே அனைவரும் -
பக்கத்து ஊருக்கு குடிபெயர்ந்தனர் ...!



நீ சிரிக்கையில் உலகமும் சிரிக்கிறது விளையாடுகையில்,
உனக்கு துணையாக வருகிறது .
நீ உறங்கப்போகையில் - உலகே அமைதியாகிவிடுகிறது.
இப்படித்தான் இரவு பிறந்ததோ ..!



அதிர்ஷ்டக் கற்கள் -
இருக்கிறதா தெரியாது ...
நீ தொடும் கற்கள் அனைத்தும் ,
அதிர்ஷ்டம் படைத்தவைதான் ..!



உன்வீட்டு நாய்க்குட்டி மட்டும் ,
வளரவே மாட்டேன் என்கிறது ?
பிறகுதான் விளங்கியது ,
குட்டிகளைத்தான் நீ கொஞ்சுகிறாயாம் ..!


என்வீட்டு காக்கை மட்டும் -
கொஞ்சம் வினோதமானது !
உன் வருகையை மட்டும் எதிர்பார்த்து -
கரைந்து கொண்டிருக்கிறது ..!


ஊர்சுற்றி கச்சேரி நடத்தும் -
குயில் கூட்டமனைத்தும் ,
உன்வீட்டு கூரையில் வாயடைத்த நிலையில் -
நீ பேசுவதை கேட்டுக்கொண்டிருக்கின்றன ..!



திருவிழாவிற்கு எல்லோரும் அலங்காரம் செய்கையில் ,
நீ மட்டும் அழகை குறைத்துக்கொண்டிருந்தாய் ?
சாமியைவிட சற்றுகுறைவான அழகில் ,
இருக்கவேண்டுமென்ற நல்லெண்ணத்தில் ..!



வெளியூருக்கு சென்று திரும்புகையில் ,
உனக்காக குச்சி மிட்டாய் வாங்கிவந்ததை கிண்டலடித்தாய் ...
எத்தனை வயதானாலும் ,
எனக்கு நீ குழந்தைதான் ..!


கடல்பார்க்க போகையில் -
மறந்துபோய் வா என்று கூப்பிட்டுவிடாதே ;
உள்செல்லும் அலையனத்தும் உன் பின்னால் வந்துவிடும் ...
அப்புறம் ஊரே வெள்ளக்காடுதான் ..!

1 comment:

Anonymous said...

wow...lovely poems dude. u rock as usual.