உன் கூந்தல் உரசி -
குளிர்ந்துபோன பகல்தான் ,
இரவாய் பிறக்கிறது ..!
அடுத்த நாள் காலையில் -
ஊருக்கு போய்விடுவாயென்று ,
இந்த இரவு மட்டும் -
விடியவே மாட்டேன் என்கிறது ..!
பார்த்து பல நாட்களாகிவிட்டதென்றேன் ,
பேசியும் நாளாகிவிட்டதென்றாய் ;
ஸ்பரிசமும் என்றேன் !!!
எண்ணம் புரிந்து -
இரவு நீண்டது ..!
ஓர் இரவில் -
நான் தொலைந்துவிட்டால் ,
என்ன செய்வாயென்றாய் ?
இனியொரு இரவை -
இவ்வுலகம் பார்க்காது ..!
எதிர்பாராத மழையால் அவதிப்பட்டு -
வானிலை அறிக்கையை ஏசினார்கள் ...
வழக்கம் மாறி ,
இரவில் நீ குளித்து தொலைத்ததால் -
வந்த வினையென்று ,
எனக்கு மட்டும் தெரியும் ..!
அது ஏன் -
இரவில் மட்டும் ,
இப்படி கொஞ்சுகிறேன் என்றாய் ...
இரவில்தான் எல்லை மீறலாமென்று -
இழுத்து அனைத்தேன் ..!
நீ அலுவலகம் விட்டு -
கிளம்பும் நேரத்தை கணக்கிட்டு ,
" நிலவு வரும் நேரமென்று" ,
வானிலை வாசித்தார்கள் ..!
உன் சிறுமூச்சு மேகமாகி ,
சினுங்களில் அது மழையாகி ,
பெருமூச்சு இடியாகி -
சிமிட்டல்கள் மின்னலாவதாய் ;
மழை உருவாகும் கதை சொன்னேன் ...
அடடா ஆரம்பித்துவிட்டானென்று -
இரவு காது மூடிக்கொண்டது ..!
நேற்றைய இரவில் -
உன் கைபட்ட மனல்திட்டு ,
இன்றைய இரவில் -
பூப்பெய்து ,
பெரும் மாளிகையாய் நிற்கிறது ..!
இரவில் -
உன் மேனி பட்ட பூவெல்லாம் ,
பகலில் -
பனியாக பெய்கிறது ..!
நீ -
நான் ,
நம் இரவு ...
அது போதும் ,
இந்த ஜென்மம் பூர்த்தியாகிவிடும் ..!
3 comments:
ada ada adadada ... unnoda romance ku alavillama pochuda. Poems are so sweet, cute, romantic, touching touching. u always rock it dude.
Tx machi.
dai peru moochu, siru moochu nalla irukuda...
Post a Comment